Tamilசெய்திகள்

நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம் – எடப்பாடி பழனிசாமி பேச்சு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாம் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-

நானும் உங்களை போல் விவசாயி என்பதால் சோழவந்தான் விவசாய பகுதி மக்களை சந்திப்பதில் மகிழ்கிறேன். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, இலவச மும்முனை மின்சாரம், வேளாண் பொருட்கள் உதவிகள் அதிமுக ஆட்சியில் வழங்கினோம். ஏழைகளுக்கு கொடுக்கும் வேட்டி சேலையில் கூட திமுக அரசு ஊழல் செய்கிறது.

அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் மீண்டும் ஏழை மாணவர்களுக்கு உறுதியாக லேப்டாப் வழங்குவோம். அதிமுக ஆட்சி வந்தவுடன் வீடில்லா விவசாய தொழிலாளிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். தங்கத்தாலி மட்டுமின்றி மணமகளுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி வழங்கப்படும்.

திமுக ஆட்சியில் மூடப்பட்ட 2000 அம்மா கிளினிக்குகளுக்கு பதிலாக 4000 அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும். ஏழை, எளிய மக்கள் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும். திமுக ஆட்சியில் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழலை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.

நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.