மேற்கு வங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும் – முதலமைச்சர் மம்தா பானர்ஜி
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR நடைபெற்று வருகிறது. அவசர கதியில் செய்யப்படுவதால் படிவத்தை விநியோகித்து, திரும்பப்பெற்று, பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் SIR எதிர்ப்பு பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “பாஜக SIR ஐ வைத்து குறித்து மத அரசியலில் ஈடுபடுகிறது. ஆனால் SIR தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள். எனவே நீங்கள் அமர்ந்திருக்கும் கிளையையே (இந்துக்கள்) வெட்ட வேண்டாம்.
நான் மேற்கு வங்கத்தில் தேசிய குடிமை பதிவேட்டை (NRC), மக்களை அடைத்து வைக்கும் தடுப்பு முகாம்களையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். என் கழுத்தை அறுத்தாலும் சரி, இங்கிருந்து யாரும் விரட்டப்பட மாட்டார்கள். மேற்கு வங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும்.
மேலும் வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படாது என்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு எனது பொறுப்பு என்றும் உறுதியளிக்கிறேன். சில விஷமிகள், மாநில அரசு மத வழிபாட்டுத் தலங்களை மசூதிகள் அல்லது கல்லறைகளாகப் பதிவு செய்ததாக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இது ஒரு பொய்.
ஏஐ தொழில்நுட்பம் இப்போது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் ஒருபோதும் கூறாத அறிக்கைகளைப் பரப்ப என் முகத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஊழலால் நிறைய பணம் சம்பாதித்தவர்கள். பீகாரில், அவர்கள் தந்திரமாக ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தினர். இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. சுயேச்சைகள் வாக்குகளைப் பிரித்தால், இழப்பு உங்களுடையது, நன்மை அவர்களுடையது.
நான் இன்னும் SIR படிவத்தை பூர்த்தி செய்யவில்லை. உங்கள் அனைவரின் பெயர்களும் சேர்க்கப்பட்ட பின்னரே நான் அதை செய்வேன். உதவ ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உதவி முகாம்களை அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
