Tamilசெய்திகள்

தலைக் காயங்கள் குறித்த உலக விழிப்புணர்வு தினம் : நிலை 1 விபத்துக் காய சிகிச்சை மையத்திற்கு விரைவாகச் செல்வதன் அவசியத்தை வலியுறுத்தும் காவேரி மருத்துவமனை

தலைக் காயங்கள் குறித்த உலக விழிப்புணர்வு தினம் மார்ச் 20-ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ள நிலையில், தலையில் பலத்த காயங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான பிற காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளை ‘நிலை 1 அவசரச் சிகிச்சை மையங்களுக்கு’ உடனடியாகக் கொண்டு செல்வதன் அவசியத்தைக் காவேரி மருத்துவமனைகள் குழுமம் வலியுறுத்துகிறது. சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் தலைமை இயக்குநர், திரு கே சங்கர், ஐபிஎஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தலைக்காயங்கள் என்பது உச்சந்தலை, மண்டை ஓடு அல்லது மூளையைப் பாதிக்கும் காயங்களைக் குறிக்கும். இவை பெரும்பாலும் சாலை விபத்துகள், கீழே விழுதல், விளையாடும்போது ஏற்படும் காயங்கள் அல்லது தாக்குதல் சம்பவங்களால் ஏற்படுகின்றன. உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் 5 கோடிக்கும் அதிகமானோருக்கு தலைக்காயம் ஏற்படும் நிலையில், இந்தியாவில் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15 லட்சமாக உள்ளது. இதில் கிட்டத்தட்ட 60% பாதிப்புகள் சாலைப் போக்குவரத்து விபத்துகளால் ஏற்படுகின்றன.

அவசரச் சிகிச்சை மையங்கள், அங்குள்ள நிபுணத்துவம் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பைப் பொறுத்து நான்கு நிலைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இதில், நிலை 1 அவசரச் சிகிச்சை மையங்கள் மிகவும் சிக்கலான மற்றும் கடுமையான காயங்களுக்குச் சிகிச்சையளிக்கும் திறனும், அனுபவமும் கொண்ட மருத்துவ நிபுணர்களையும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட உயர் சிறப்பு சிகிச்சை மையங்களாகும்.

இதுகுறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய ரேடியல் ரோடு காவேரி மருத்துவமனையின் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை மையத்தின் இயக்குநரும், நரம்பியல் துறையின் குழு வழிகாட்டியுமான டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர் கூறியதாவது: “உரிய நேரத்தில் அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சை உயிர்களைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட நிலை 1 அவசரச் சிகிச்சை மையத்திற்குப் பாதிக்கப்பட்ட நபர்கள் எவ்வளவு விரைவாக அழைத்து வரப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே சிகிச்சையின் பலன் இருக்கும். விபத்துக் காயத்திற்குப் பிறகு பொன்னான நேரம் என்று அழைக்கப்படும் ஒரு மணி நேரத்திற்குள் இது போன்ற உயர் சிறப்பு மையங்களுக்கு நோயாளிகளைக் கொண்டு வருவது, அவர்களது உயிர்களைக் காப்பாற்றவும், நரம்பியல் ரீதியாக அவர்கள் விரைவாகக் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் பெரிதும் உதவும்.”

வடபழனி காவேரி மருத்துவமனையின் நரம்பியல் துறை இயக்குநரும், மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரங்கநாதன் ஜோதி கூறுகையில்: “தலையில் ஏற்படும் பலத்த காயங்களுக்கு அவசர நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மூளைக் காயம் உள்ள நோயாளிகளுக்கு, மண்டையோட்டுக்குள் ஏற்படும் இரத்தக் கசிவு அல்லது மூளை வீக்கம் போன்றவற்றுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் நிலைமை மிக வேகமாக மோசமடையக்கூடும். நிலை 1 மையத்தில் உள்ள அதிநவீன வசதிகள் மற்றும் நிபுணர்களின் சேவை, நோயாளிகள் முழுமையாகக் குணமடைவதற்கும் நீண்டகால ஊனத்தால் சிரமப்படுவதற்கும் இடையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.”

காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில்: “நமது சமூகத்தில் அதிகரித்து வரும் விபத்துகள் மற்றும் காயங்கள் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை இந்த விழிப்புணர்வு தினம் நமக்கு நினைவூட்டுகிறது. விபத்துக் காயங்களுக்கான சிகிச்சை வசதிகளை வலுப்படுத்துவதும், நோயாளிகளை விரைவாக அதிநவீன சிறப்பு மையங்களுக்குக் கொண்டு செல்வதை உறுதி செய்வதும் மிக முக்கியமாகும். காவேரி மருத்துவமனைகளின் மருத்துவக் குழுக்கள் உயிரைக் காப்பாற்ற எப்போதும் தயாராக உள்ளன.”

நிலை 1 விபத்துக்காய சிகிச்சை மையத்தின் வசதிகள்: ஆழ்வார்பேட்டை, ரேடியல் ரோடு மற்றும் வடபழனி உள்ளிட்ட மையங்களில் உள்ள காவேரி மருத்துவமனையின் நிலை 1 அவசரச் சிகிச்சை மையங்கள் கீழ்க்கண்ட வசதிகளைக் கொண்டுள்ளன:

24×7 நேரமும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அவசரச் சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் தீவிர சிகிச்சை சிறப்பு நிபுணர்களின் சேவை.
சிடி மற்றும் எம்ஆர்ஐ உள்ளிட்ட அதிநவீன ஸ்கேன் வசதிகள்.
பிரத்யேக சிறப்பு அவசரச் சிகிச்சைக் குழுக்கள் மற்றும் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய அறுவை சிகிச்சை அரங்குகள்.
சிக்கலான காயங்களைக் கையாளும் திறன் கொண்ட பல்வேறு துறைகளின் மருத்துவர்களை உள்ளடக்கிய குழுக்கள் மற்றும் நரம்பியல் சார்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவுகள்.

ஆம்புலன்ஸ் மற்றும் காவேரி கேர் மொபைல் செயலி: அவசரநிலை சிகிச்சையை மேலும் விரைவாக வழங்கவும் வலுப்படுத்தவும், காவேரி மருத்துவமனை அதன் அதிநவீன ஆம்புலன்ஸ் சேவைகளை மேம்படுத்தியுள்ளது. மேலும், ‘காவேரி கேர்’ மொபைல் செயலியில் SOS (அவசர உதவி) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் அவசர உதவி மற்றும் ஆம்புலன்ஸ் சேவையை உடனடியாகப் பெற்று அருகிலுள்ள விபத்துக்காய சிகிச்சை மையத்திற்கு விரைவாகச் செல்ல முடியும்.