Tamilசெய்திகள்

கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வழிமுறைகள்

வானிலை ஆய்வு மையமும் கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? எதை செய்ய வேண்டும்? எதனை செய்யக் கூடாது? என்ற வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

* தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவு அடிக்கடி குடிக்க வேண்டும்.

* லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்வது அவசியம்.

* பயணத்தின் போது தண்ணீர் பாட்டில்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

* மயக்கம் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

* சர்க்கரை-உப்பு கரைசல், வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்சி, வடிகஞ்சி, எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இவைகள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

* வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ விட்டுவிடக்கூடாது.

* வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.

* குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

இதுமட்டுமல்லாமல், வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நபருக்கு வெப்பத்தால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே அதுபோன்ற நபருக்கு முதலுதவி சிகிச்சை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது பற்றியும் ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

அதன்படி, வெப்பத்தின் தாக்கத்தால் சோர்வடையும் நபரை நிழலின் கீழ் படுக்க வைக்கவேண்டும். ஈரத்துணியால் அவரை துடைத்து கழுவ வேண்டும். சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை தலையில் ஊற்றலாம். அவருடைய உடல் வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சர்க்கரை – உப்பு கரைசல், எலுமிச்சை சர்பத் ஆகியவற்றை வழங்கலாம். அதன் பின்னர் அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.