தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சிக்கலான இதயத் துடிப்பு கோளாறுகளுக்கு நவீன 3D தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சை அளிக்கும் காவேரி மருத்துவமனை
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, சென்னை வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு மேம்பட்ட மின்னூட்ட அடிப்படையிலான உடற்கூறு படவரைவு (electroanatomical mapping) தொழில்நுட்பமாகும். இதயத்தின் மேல் அறைகளில் ஏற்படும் ‘ஏட்ரிய குறுநடுக்கம்’ மற்றும் கீழ் அறைகளில் ஏற்படும் ஆபத்தான ‘வேகமான இதயத்துடிப்பு’ உள்ளிட்ட சிக்கலான இதயத் துடிப்பு கோளாறுகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்க இது வழிவகுக்கிறது.
இதயத் துடிப்பு கோளாறுகளைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் இந்தத் தொழில்நுட்ப சாதன வசதிகளை பிரபல நடிகர் திரு. ஆர். சரத்குமார் அவர்கள் காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் வடபழனி காவேரி மருத்துவமனையின் இதய மின்உடலியங்கியல் துறை இயக்குநரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் தீப் சந்த் ராஜா ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
CARTO™ 3 சாதனம், இது இதயத்தின் மின் செயல்பாடுகளை உயர்தர 3D வரைபடங்களாக உருவாக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் அசாதாரண இதயத் துடிப்புகள் உருவாகும் இடத்தைத் துல்லியமாகக் கண்டறியலாம். சிகிச்சை செயல்முறைகளின் போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள CARTOSOUND® இதய செயல்பாட்டின் படங்களை நேரடியாக நிகழ்நேரத்திலேயே வழங்குகிறது. மிகக் குறைந்த நேரத்தில் அதிக ஆற்றலைச் செலுத்தி, இதய மேலறையில் குறுநடுக்கத்தை சரிசெய்யும் சிகிச்சையை வேகமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள QDOT® Catheter உதவுகிறது. சீரற்ற மின் சமிக்ஞைகளை உருவாவதற்கு காரணமாக இருக்கும் திசுக்களைப் பாதுகாப்பாக அழிப்பதற்கு nGEN® Radiofrequency System என்ற சாதனம் உதவுகிறது.
புதிய தொழில்நுட்ப சாதனங்களின் அறிமுக நிகழ்வில் பிரபல திரைப்பட நடிகர் திரு. ஆர். சரத்குமார் அவர்கள் பேசுகையில்: “இதயத் துடிப்பு கோளாறுகளுக்கு நவீன சிகிச்சைகளை அறிமுகப்படுத்தி, நோயாளிகள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ காவேரி மருத்துவமனை உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதய ஆரோக்கியமே ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடித்தளமாக இருக்கிறது. எனவே, சமச்சீரான உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறை ஆகியவை நம் இதயத்தை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் மிக எளிய நடவடிக்கைகள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.” என்று கூறினார்.
காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் இந்நிகழ்வில் கூறியதாவது: “இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மிகவும் சவாலான உடல்நல சிக்கல்களுக்கு அதிக பாதுகாப்புடனும் மற்றும் அதிகரித்த வெற்றி விகிதத்துடனும் சிகிச்சையளிக்க உதவுகின்றன. இந்த முன்னோடித்துவ நடவடிக்கை, சென்னையை உலகளாவிய இதய சிகிச்சை வரைபடத்தில் முன்னிலைப்படுத்தியிருக்கிறது; அத்துடன், காவேரி மருத்துவமனையின் வெற்றிகரமான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் இந்நிகழ்வு அமைகிறது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை நோயாளிகள் தங்கள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே பெறுவதை நாங்கள் இதன்மூலம் உறுதி செய்திருக்கிறோம். தமிழ்நாட்டில் முதன் முறையாக நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான சிகிச்சையை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.”
வடபழனி காவேரி மருத்துவமனையின் இதய மின்உடலியங்கியல் துறை இயக்குநர் டாக்டர் தீப் சந்த் ராஜா பேசுகையில், “இதயத்தின் மின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் இதயத் துடிப்பு கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் படபடப்பு, மயக்கம் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படலாம். மின் உடலியங்கியல் ஆய்வின் மூலம் இதைக் கண்டறிந்து, ரேடியோபிரீக்வென்சி அப்லேஷன் என்ற சிகிச்சை செயல்முறை மூலம் குணப்படுத்தலாம். சிக்கலான உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண மேம்பட்ட தொழில்நுட்பமும், மருத்துவ நிபுணத்துவமும் அவசியம். இந்த தேவையை நன்கு புரிந்திருக்கின்ற காவேரி மருத்துவமனை இப்போது தமிழகத்தில் முதன்முறையாக இத்தகைய நவீன சிகிச்சைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதயத் துடிப்பு கோளாறுகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சை சென்னையிலேயே கிடைப்பதை இதன்மூலம் நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்.” என்று கூறினார்.
