Tamilசெய்திகள்

ஜி7 கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார்

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உள்பட உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து அந்த மாநாட்டில் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் உச்சி மாநாடு, முதலில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வருகிற 24-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் ஜோபைடன், தனது ஆஸ்திரேலிய பயணத்திட்டத்தை திடீரென ஒத்திவைத்ததால், குவாட் மாநாடு சிட்னியில் இருந்து ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் ஆகியோர் பங்கேற்று, பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். ஜி7 உச்சி மாநாட்டையொட்டி, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பிரதமர் மோடி, ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையையும் திறந்து வைக்க உள்ளார். ஜப்பானைத் தொடர்ந்து, பப்புவா நியூகினியாவுக்கு மே 22-ந் தேதி செல்கிறார். அங்கு நடைபெறவிருக்கும் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகும் அவர், அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீசிடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், இந்திய வம்சா வளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் உரையாற்ற உள்ளார். இந்த மூன்று நாடுகள் பயணத்தில் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாட் மாநாடு இடமாற்றப்பட்டுள்ளதால், அது வழக்கமான உச்சி மாநாடாக இருக்குமா அல்லது சாதாரண கூட்டமாக இருக்குமா? என்று டெல்லியில் வெளியுறவு செயலர் வினய் குவாத்ராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “4 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கும்போது, அது உச்சி மாநாடு தான்” என்று அவர் பதிலளித்தார்.