Tamilசெய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், ‘சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது’ என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

இருப்பினும், “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது” என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

நீதிபதியை தாக்க முயன்றது நமது ஜனநாயகத்தில் உயர்ந்த நீதித்துறை மீதான தாக்குதல். நீதிபதியை தாக்க முயன்றது அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு இன்னும் நம் சமூகத்தில் நீடிக்கிறது என்பதை காட்டுகிறது.

தலைமை நீதிபதி கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம் நீதித்துறையின் வலிமையை காட்டுகிறது. நீதிபதி பெருந்தன்மையாக கடந்து சென்றாலும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.