’சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
பொங்கல் பண்டிகையின்போது கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக சென்னையில், கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டின் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா மாபெரும் கலைவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.
15-ந்தேதி (நாளை) முதல் 18-ந்தேதி வரையில் (மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) 20 இடங்களில் 40 வகையான கலைகளுடன் இந்த விழா நடைபெறுகிறது.
சென்னை சங்கமத்தில் முதன்முறையாக ‘கோ- ஆப்டெக்ஸ்’ மற்றும் கலை பண்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் அலங்கார ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி காணும் பொங்கலான 17-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை அருங்காட்சியகத்தின் வளாகத்தில் தேசிய கலைக்கூடம் முன்புறம் மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இசைக்கல்லூரி, எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர்கோட்டம், மெரினா கடற்கரை, தியாகராயநகர் நடேசன் பூங்கா எதிரே உள்ள மைதானம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, கிண்டி கத்திபாரா பூங்கா, ஆவடி படைத்துறை உடை தொழிற்சாலை வளாகம், தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
