12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது – 8 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகிறார்கள்
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26-ம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.
முறைகேடுகளைத் தடுக்க 4,540 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள்கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். அதேபோல், விடைத்தாள்களில் எவ்வித சிறப்புக் குறியீடு, தேர்வெண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கூடுதல் நேரம் உள்பட சிறப்பு சலுகைகள் வழங்குதல் சார்ந்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும்.
தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 14417 மற்றும் 94983 83075, 94983 83076 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
