Tamilசெய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தி மூடல் எதிரொலி – பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது

உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை இரான் முடக்கியதால் என்ன ஆகும்?

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளதால் அவ்வழியே செல்லும் எல்லா கப்பல்களையும் அவர்கள் நிறுத்த வேண்டியதில்லை. அதற்கு மாறாக கடலில் குண்டு வைக்கலாம். அவ்வழியே வரும் கப்பல்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தலாம் அல்லது கப்பல்களை சிறைபிடிக்கலாம். இதனால் அந்த பாதை வழியிலான கப்பல் போக்குவரத்து அதிக ஆபத்து நிறைந்ததாக ஆகிவிடும்.

கப்பல்கள் கடலில் செல்ல Marine Insurance அவசியம். இப்போது ஹார்முஸ் ஜலசந்தி ஆபத்தான பாதையாக மாறியுள்ளதால் அப்பகுதி செல்லும் கப்பல்களின் இன்சூரன்ஸ் இப்போது பலமடங்கு அதிகரிக்கும். கிட்டத்தட்ட இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை 25 மடங்கு கூட அதிகரிக்கலாம். இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரித்தால் அந்த பாதை வழியாக கப்பல் நிறுவனங்கள் செல்ல விரும்பாது. இதனால் எண்ணெய் போக்குவரத்து குறைந்து பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக உயரும்.

அதாவது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக முடக்காமல் அச்சுறுத்தல் கொடுத்தாலே கப்பல்களுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்ந்துவிடும். இதனால் கப்பல் போக்குவரத்து குறைந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விடும். ஆதலால் போர் என்பது வெறும் குண்டு மட்டும் அல்ல, சில நேரங்களில் இத்தகைய பொருளாதார கணக்குகளும் போருக்கான பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்படும் என்பதற்கு ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரானின் நடவடிக்கை நமக்கு உணர்த்துகிறது.