மகாராஷ்டிராவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் புதிய கொள்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
மகாராஷ்டிர மாநிலத்தில் ஓலா, உபெர், ரேபிடோ போன்ற செயலிகள் மூலம் இயக்கப்படும் பைக் டாக்ஸி (Bike Taxi) சேவைகளை முறைப்படுத்தி, அவற்றுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பதற்கான புதிய கொள்கை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தற்போது மாநிலத்தில் சுமார் 4 லட்சம் முதல் 4.5 லட்சம் பைக் டாக்ஸிகள் அனுமதியின்றி இயங்கி வருவதால், அரசுக்கு எவ்வித வருவாயும் கிடைக்காத சூழலில், இத்துறையை ஒழுங்குமுறைப் படுத்தும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகளின்படி, பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் அனைவரும் கண்டிப்பாக மகாராஷ்டிர மாநில இருப்பிடச் சான்றிதழ் (Domicile Certificate), வணிக ரீதியான ஓட்டுநர் உரிமம், பொதுச் சேவை வாகன பேட்ஜ் (PSV Badge) மற்றும் காவல் துறை சரிபார்ப்புச் சான்றிதழ் போன்ற தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு சவாரிக்கும் (Ride) தலா ரூ.5 வீதம் அரசுக்குச் செலுத்த வேண்டும் என்றும், கட்டணத்தில் 2 சதவீதப் பங்கு ஓட்டுநர்களின் நல நிதிக்கு (Welfare Fund) மாற்றப்படும் என்றும் இப்புதிய கொள்கையில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
