Tamilசெய்திகள்

த.வெ.கவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் நடிகை ரஞ்சனா நாஞ்சியார்

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனா நாச்சியார். பிரபல இயக்குநர் பாலாவின் அண்ணன் மகளான இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் நடிகையானார். இதன் பின் ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். சமீபத்தில், தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அந்த மனுவில் ஒரு நடிகையுடன் விஜய் தொடர்பில் இருப்பதாகவும், தன்னை சித்ரவதை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சினிமா தயாரிப்பாளர் இல்ல திருமண விழாவிற்கு விஜய், நடிகை த்ரிஷாவுடன் ஒரே நிற ஆடையில் வந்தது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவெகவையும், விஜய்யையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த சம்பவத்தை விஜய் ஆதரவாளர்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த சூழலில், மகளிர் தினவிழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், தன்மீதான விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு, “அது அவ்வளவு வொர்த் இல்லை” என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்தை நடிகை ரஞ்சனா நாச்சியார் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அத்துடன், ”எது வொர்த் இல்லை தலைவா? உங்கள் மனைவியா அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா? அடுத்த குழந்தைக்குத் தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா?” என பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இது தவெகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், த.வெ.க-வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று (மார்ச் 19) இணைந்தார். இதன் பின் ரஞ்சனா நாச்சியார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”திராவிட இயக்கத்தில் இணைந்து கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன். பெண்களுக்கான பாதுகாப்பை திமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியாலும் வழங்க முடியாது என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.