விஜய் நாட்டை ஆள வேண்டும் என்பது மக்களின் ஆசை – செங்கோட்டையன் பேட்டி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அத்துடன் தவெக சார்பில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல்- 8-ம் தேதி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக காலை 10 மணிக்கு நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஜய் பிரச்சாரத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கங்கை கொண்டான், ராஜகோபாலபுரம், கே.டி.சி.நகர் உள்ளிட்ட இடங்களை தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று (ஏப்ரல் 7) பார்வையிட்டார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நெல்லையில் விஜய் பிரச்சாரம் செய்ய 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பொதுக்கூட்டம் நடத்தப்படும். விஜய் பிரச்சாரத்திற்கு கடும் விதிமுறைகள் விதிக்கப்படுகிறது. சென்னையைத் தவிர மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்ய பெரிய அளவில் பிரச்சனை இல்லை. எனது தொகுதியான கோபியில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. விஜய் நாட்டை ஆள வேண்டும் என்பது மக்களின் ஆசை. அவர்களின் ஆசை கண்டிப்பாக நிறைவேறும்” என்று கூறினார்.
