நடிகர்களின் வாகனத்தைப் பின்தொடரக் கூடாது – இளைஞர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை
ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்று திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது விஜயின் ஜனநாயகன் முடக்கப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு, நான் கருத்து சொல்ல விரும்பவில்லை, என்று தெரிவித்தார்.
மேலும், நடிகர்கள் வாகனத்தை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கும் இளைஞர்களுக்கு ஒரு மூத்த நடிகராக நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், “நடிகர்களின் வாகனத்தைப் பின்தொடரக் கூடாது. இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடிபட்டால் உங்களுக்குதான் பாதிப்பு. இளைஞர்கள் படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரத்தை விட்டுவிட்டால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இளைஞர்கள் இதைக் கவனத்தில் வைத்துக்கொண்டு படிப்பில் மட்டுமே முழு சிந்தனை இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குடிப் பழக்கம், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள். வாழ்க்கையே கெட்டுப்போய் விடும். இது உங்களை மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கும். வாழ்க்கை நரகமாகிவிடும். போதைப் பழக்கத்தோடு நண்பர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.” என்று தெரிவித்தார்.
