முதல்வரின் லண்டன் பயணத்தால் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்’ ஒத்தி வைப்பு
முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ளதால், செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்’ செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இத்திட்ட விரிவாக்கத்தை, லண்டன் பயணம் முடிந்து திரும்பியதும் செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவுள்ளார்.
அதேநாளில் மாநிலம் முழுவதும் இத்திட்டம் அமலுக்கு வரவுள்ள நிலையில், இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்ட விரிவாக்கம் நடைமுறைக்கு வரும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைச் செயலாளர் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
