Tamilசெய்திகள்

விஜய்யைக் கண்டு நான் ஒருபோதும் பொறாமைப்படவில்லை – ரஜினிகாந்த் விளக்கம்

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் த.வெ.க கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்ததோடு, கூட்டணி ஆட்சியில் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு திரையுலகம் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, விமான நிலையத்தில் நிருபர்கள் விஜய் முதல்வராக பொறுப்பேற்றது குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கருத்து கேட்ட போது அவர் மவுனமாக சென்று விட்டார். இதனை தொடர்ந்து விஜயின் அரசியல் வெற்றியை ரஜினிகாந்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அவர் விஜய் மீது பொறாமைப்படுகிறார், என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இந்த நிலையில், இத்தகைய கருத்துகளுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இன்று காலை, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

“அரசியல் களத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள நடிகர் விஜய்யைக் கண்டு நான் ஒருபோதும் பொறாமைப்படவில்லை, அந்தளவுக்கு நான் ஒன்றும் கேவலமான மனிதன் அல்ல” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது செய்தியாளர் சந்திப்பில் மிகவும் ஆவேசமாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் முதலில் நேரில் சென்று சந்தித்தது மு.க.ஸ்டாலினை மட்டும்தான் என்றும், தங்களுக்குள் கடந்த 35 முதல் 40 ஆண்டுகாலமாக மிக ஆழமான நட்பு இருப்பதாகவும், கொளத்தூர் தொகுதியில் அவர் தோல்வியடைந்ததால் ஒரு நண்பனாக மட்டுமே அவரை நேரில் போய்ப் பார்த்ததாகவும் ரஜினி விளக்கியுள்ளார்.

ஆனால், தற்போதுள்ள அரசியல் சூழலில் தான் ஏதோ இரண்டு கட்சிகளைப் பின்னாடி இருந்து அரசியல் ரீதியாக ஒன்றிணைக்க முயற்சிப்பது போலப் பலர் அவதூறாகப் பேசி வருவதாகவும், அப்படிப்பட்ட தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் கேவலமான நபர் தான் இல்லை என்றும் ரஜினிகாந்த் ஆணித்தரமாகத் தெரிவித்து “மத்தியில் ஆளும் சக்திவாய்ந்த பாஜாக மற்றும் தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகள் ஆகிய அத்தனை பேருக்கும் எதிராகத் தனித்து நின்று களம் கண்டு, மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள நடிகர் விஜய், முன்பு எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் சாதித்ததை விடவும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மனம்திறந்து பாராட்டியுள்ளார்.

விஜய்யின் இந்த விஸ்வரூப அரசியல் வளர்ச்சி தனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் அளிப்பதாக அவர் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ள இந்த உன்னதமான வார்த்தைகள், தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி ரசிகர்களாலும் அரசியல் விமர்சகர்களாலும் உற்றுநோக்கப்படும் மிக முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.