Tamilசெய்திகள்

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வறண்டது! – திருச்சி மாநகரில் குடிநீர் பற்றாக்குறை

திருச்சி நகரின் பிரதான குடிநீர் ஆதாரங்களான காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால், திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாள்தோறும் சுமார் 15 மில்லியன் லிட்டர் (MLD) குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்; இது விவசாயத்திற்கு மட்டுமின்றி நிலத்தடி நீர் மட்டத்தைப் உயர்த்தவும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் உறுதுணையாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்படாததாலும், போதிய மழை இல்லாததாலும் விவசாயம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாகச் சரிந்துள்ளது.

இந்த நீர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஸ்ரீரங்கம் மண்டலத்திற்குட்பட்ட 1 முதல் 7 வரையிலான வார்டுகளில் மாலை நேரக் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, காலையில் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. நகரின் பல பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் நிலை உருவாகியுள்ள நிலையில், பற்றாக்குறை நீடித்தால் மாநகரம் முழுமைக்கும் மாற்று நாள் முறையிலேயே குடிநீர் வழங்கும் சூழல் ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், ₹500 கோடி செலவில் கட்டப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராத கதவணையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காகத் தற்போது திறக்கப்படும் 1,000 கனஅடி நீரின் அளவை உயர்த்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.