சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் தனியார் நிறுவனம் மூலம் நடத்துனர்கள் நியமனம் – பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்க உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் 1,797 நடத்துனர்களைக் குத்தகை முறையில் நியமிக்க தவெக அரசு ஒப்பந்தம் வழங்கியிருப்பதை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
திமுக ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளின் அடிப்படையில், உழைப்புச் சுரண்டலுக்கும் இடஒதுக்கீடற்றத் தன்மைக் கும் வழிவகுக்கும் இத்தகைய குத்தகை முறை நியமனங்களை தவெக அரசு தொடருவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், மொத்தமுள்ள 18,898 பணியிடங்களில் சுமார் 45% இடங்கள் குத்தகை ஊழியர்களால் நிரப்பப்பட்டால் சமூகநீதியும் தொழிலாளர் உரிமைகளும் பாதிக்கப்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மாநகரப் போக்குவரத்துக் கழகம் உட்பட அனைத்து அரசுத் துறைகளிலும் குத்தகை முறையை ரத்து செய்து, காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் காலமுறை ஊதிய அடிப்படையில் நிரந்தரமாக நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
