Tamilசெய்திகள்

முதுகலை மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் அளித்த தேசிய மருத்துவ ஆணையம் – நாடு முழுவதும் 63,177 இடங்கள் அறிவிப்பு

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) 2026-27 கல்வி ஆண்டிற்கான முதுகலை மருத்துவ இடங்களுக்கு (PG Medical Seats) ஒப்புதல் அளித்து, நாடு முழுவதும் மொத்தம் 63,177 இடங்களை அறிவித்துள்ளது.

இதில் 8,323 இடங்களுடன் கர்நாடக மாநிலம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா (6,992) இரண்டாமிடத்திலும், தமிழ்நாடு (6,306) மூன்றாமிடத்திலும் உள்ளன. தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (6,082), ஆந்திரப் பிரதேசம் (4,142), தெலங்கானா (3,998) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்த 10 மாநிலங்கள் மட்டுமே நாட்டின் மொத்த PG மருத்துவ இடங்களில் 78% (48,998 இடங்கள்) வகிக்கின்றன. மொத்த இடங்களில் அரசு நிறுவனங்களில் 33,086 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 21,892 இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் (Deemed Universities) 8,197 இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் MD மற்றும் MS படிப்புகளுக்கு மட்டும் 58,098 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாடப்பிரிவு வாரியாகப் பார்க்கையில், ஜெனரல் மெடிசின் பிரிவில் அதிகபட்சமாக 6,143 இடங்களும், மயக்கவியல் (Anaesthesiology) பிரிவில் 5,672 இடங்களும், பொது அறுவை சிகிச்சைப் (General Surgery) பிரிவில் 5,591 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 24 அன்று NEET-PG 2026 முடிவுகள் வெளியான நிலையில், விரைவில் மருத்துவக் கலந்தாய்வு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.