Tamilசெய்திகள்

எம்.ஜி.எம் ஹெல்த்கேரில் தொடர் மருத்துவ கல்வி (சி.எம்.இ) திட்டம்! – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தொடங்கி வைத்தார்

எம்.ஜி.எம் ஹெல்த்கேர் இன்று ஏற்பாடு செய்திருந்த நரம்பியல் மறுவாழ்வு குறித்த தொடர் மருத்துவக் கல்வி (CME) திட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்புமிகு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, ‘ரெஸ்டோரிங் ஃபங்ஷன், ரினியூவிங் ஹோப்’ என்ற தலைப்பிலான கையேட்டை அவர் வெளியிட்டார்.

இந்த மருத்துவ கையேட்டை உருவாக்குவதில் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் வி.ஆர். ரூபேஷ்குமார், மறுவாழ்வு மருத்துவத்தின் கிளினிக்கல் லீடு டாக்டர் ஏ.ஜே. ராஜேந்திரன் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.பி. கவியரசன் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.

இக்கல்விதிட்டத்தில் உடல் மருத்துவம், மறுவாழ்வு சிகிச்சை, நரம்பியல், இயன்முறை சிகிச்சை, தொழில்முறை சிகிச்சை, பேச்சு-மொழி நோயியல் மற்றும் மருத்துவ உளவியல் நிபுணர்கள் என 150-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பங்கேற்றனர். காயம் அல்லது உடல்நல பாதிப்பால் இழக்கப்பட்ட உடலியக்க செயல்பாட்டை மீட்டெடுத்தல், மற்றும் நரம்பியல் மறுவாழ்வில் சமீபத்திய முன்னேற்றங்கள் மீது இக்கல்வித்திட்டம் சிறப்பு கவனம் செலுத்தியது. பக்கவாதத்திற்குப் பிந்தைய கீழ் மூட்டு மறுவாழ்வு, தீவிர சிகிச்சைப் பிரிவில் நரம்பியல் மறுவாழ்வு, நுரையீரல் இயக்கவியலை மேம்படுத்துதல், மூளை-கணினி இடைமுகம் மற்றும் மேம்பட்ட சிகிச்சை உத்திகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் சிறப்புரையாற்றினர். இந்த தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சியில் 26-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இத்திட்டம் குறித்துப் பேசிய டாக்டர் வி.ஆர். ரூபேஷ்குமார், “சி.எம்.இ திட்டம் என்பது, நரம்பியல் மறுவாழ்வுத் துறையில் அறிவு, அனுபவங்கள் மற்றும் வளர்ந்து வரும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ள நிபுணர்களை ஒன்றிணைக்கும் ஒரு அத்தியாவசிய கல்வி முயற்சியாகும். நரம்பியல் மறுவாழ்வு என்பது பொறுமை, துல்லியம், கனிவு மற்றும் வலுவான பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படும் ஒரு செயல்முறையாகும். மருத்துவ அறிவை மேம்படுத்தவும், புதிதாக கண்டறியப்பட்டுள்ள மறுவாழ்வு சிகிச்சை உத்திகளைப் புரிந்துகொள்ளவும், பல துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இக்கல்வித் திட்டம் மருத்துவப் பணியாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். மருத்துவ முன்னேற்றங்களையும், புதிய உத்திகளையும் தொடர்ந்து கற்று, தங்கள் அறிவையும் திறனையும் மேம்படுத்துவதன் மூலம் எங்கள் நோயாளிகள் அதிக சுதந்திரம், கண்ணியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மீண்டும் பெறுவதற்கு நாங்கள் இன்னும் சிறப்பாக உதவ முடியும்,” என்று கூறினார்.