ஆசியாவிலேயே முதல் முறையாக சர்வதேச நோயாளிகளுக்கு புதிய தலைமுறை ‘இடுப்பு எலும்பை பாதுகாக்கும் அறுவைசிகிச்சை’-யை வெற்றிகரமாக செய்த சிம்ஸ் மருத்துவமனை
இடுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் புதிய மைல்கல்லை எட்டும் வகையில், சிம்ஸ் மருத்துவமனை ஆசியாவிலேயே முதல் முறையாக புதிய தலைமுறை ‘எலும்பை பாதுகாக்கும் இடுப்பு அறுவை சிகிச்சையை’ (Bone-Sparing Hip Procedure) அமெரிக்காவின் கலிபோர்னியா சேர்ந்த 44 வயது வயதுடையவர் மற்றும் இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த 58 வயது வயதுடையவர் என இரண்டு சர்வதேச நோயாளிகளுக்கு வெற்றிகரமாக செய்துள்ளது.
வழக்கமான இடுப்பு அறுவைசிகிச்சைகளில் அதிகளவு எலும்பு அகற்றப்படும். ஆனால், இந்த நவீன முறை நோயாளியின் ஆரோக்கியமான எலும்பை அகற்றாமல் பெருமளவு தக்கவைத்து பாதுகாக்கிறது. இதன்மூலம், பொருத்தப்படும் செயற்கை மூட்டின் நிலைத்தன்மை அதிகரிப்பதுடன், அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் விரைவாகவும் முழுமையாகவும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிகிறது. குறிப்பாக, உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் இளவயதினருக்கு இந்த சிகிச்சை முறை மிகவும் உகந்தது. விரிவான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் முறையான திட்டமிடலுக்குப் பிறகே மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சைக்குப் பின், இரு நோயாளிகளும் விரைவாகக் குணமடைந்து வருகின்றனர்.
அறுவைசிகிச்சைக் குழுவை வழிநடத்திய எலும்பியல் பிரிவின் இணை இயக்குநர் மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் விஜய் சி. போஸ் கூறுகையில், “இடுப்பு மாற்று அறுவைசிகிச்சை முறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்பட்ட மாற்றமாகும். வலியுள்ள மூட்டை மாற்றுவது மட்டுமின்றி, உடலின் இயற்கையான அமைப்புக்கு எவ்வித இடையூறும் இன்றி, நோயாளியின் சொந்த எலும்பை முடிந்தவரை பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம். நோயாளியின் வயது, எலும்பின் தரம் மற்றும் மருத்துவ நிலை ஆகியவற்றைத் துல்லியமாக ஆராய்ந்த பிறகே இச்சிகிச்சை செய்யப்படுகிறது” என்றார்.
எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கூறுகையில், “இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு மேம்பட்ட, பாதுகாப்பான மருத்துவ சேவைகளை வழங்குவதே எங்களின் குறிக்கோள். சிம்ஸ் மருத்துவமனையின் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிக்கும் மற்றும் அனுபவமும் அர்ப்பணிப்பும் கொண்ட எமது மருத்துவக் குழுவின் திறமைக்கும் இந்த சாதனை சிகிச்சை ஒரு சிறந்த சான்றாகும்” என்றார்.
சிம்ஸ் மருத்துவமனையின் துணைத்தலைவர் டாக்டர் ராஜு சிவசாமி கூறுகையில், “இச்சிகிச்சை முறையே இடுப்பு அறுவைசிகிச்சையின் எதிர்காலமாக இருக்கப்போகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நோயாளிகள் இந்த சிகிச்சைக்காக சென்னை வந்திருப்பது, இந்திய மருத்துவ நிபுணத்துவத்தின் மீதான உலக நாடுகளின் நம்பிக்கையைக் காட்டுகிறது. சிக்கலான எலும்பியல் சிகிச்சைகளை வெற்றிகரமாக கையாளுவதில் முக்கிய மருத்துவ மையமாக சென்னை மாநகரம் உருவெடுத்துள்ளதையும், சிம்ஸ் மருத்துவமனை அதில் தலைசிறந்து விளங்குவதையும் இது நிரூபிக்கிறது” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த திரு. ஹார்வி வெல்லஸ் ஹாஸ்கின்ஸ் IV மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த திரு. மார்க் வில்லியம் மேபேங்க் ஆகியோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துக் கூறுகையில்: “எங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் சிறப்பான முடிவுகள் அளவற்ற மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது. இதற்காக சென்னைக்கு வர வேண்டும் என்ற எங்களது முடிவு முற்றிலும் சரியானது என்பதை இப்போது முழுமையாக உணர்கிறோம். எங்கள் சொந்த நாட்டிலேயே சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், தலைசிறந்த மருத்துவ நிபுணத்துவம், அதிநவீன உள்கட்டமைப்பு, புதுமையான அறுவைசிகிச்சை முறைகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அறுவைசிகிச்சைக் குழுவினர் மீதான எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாகவே நாங்கள் சிம்ஸ் மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தோம்.
உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு மிகவும் மேம்பட்ட மற்றும் சிறப்பு வாய்ந்த மருத்துவச் சேவைகளை வழங்குவதில் இந்திய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் அபாரத் திறனை எங்களது சொந்த அனுபவத்தின் மூலம் நேரடியாக அறிந்துகொண்டோம். எங்கள் சிகிச்சையின் வெற்றி அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை, சிக்கலான மற்றும் புதுமையான எலும்பியல் (ஆர்த்தோபெடிக்) சிகிச்சைகளுக்கு முதன்மையான சர்வதேச மையமாக அறியப்படுவதற்கு முழுத் தகுதியும் சென்னைக்கு உள்ளது.
இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் சாத்தியமாக்கிய சிம்ஸ் மருத்துவமனைக் குழுவினரின் அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் மற்றும் அக்கறையான கவனிப்பிற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
