தமிழகம் முழுவதும் பரவும் டெங்கு காய்ச்சல் – அன்புமணி ராமதாஸ் கவலை
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதோடு இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் இதுவரை 16,830 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புரிதலும் விழிப்புணர்வும் இல்லாமல் பலர் சாதாரண காய்ச்சலுக்கான சிகிச்சையைப் பெறுவதே உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படாத டயர்கள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்ட நீர் தேங்கும் பொருட்களை அகற்றும் சிறப்பு இயக்கத்தைப் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக தீவிர விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்வதோடு, நிலவேம்புக் குடிநீர் அருந்துதல் மற்றும் ரத்த அணுக்களை உயர்த்தப் பப்பாளி இலைச் சாறு அருந்துதல் போன்ற தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
