சென்னை விமான நிலையத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் – டிடிவி தினகரன் கண்டனம்
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாநில அரசுகள் விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து தனியாரிடம் ஒப்படைக்கக் கோருவது ஏற்புடையதல்ல என்றும், செயல்பாடுகள் அல்லது உட்கட்டமைப்பில் குறைபாடுகள் இருந்தால் அதை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர பொதுத்துறை நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
லாப நோக்கம் மட்டுமே முதன்மையாகி பயணிகள் மற்றும் ஊழியர்கள் மீது கூடுதல் சுமை ஏற்படும் என்பதால், இத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
