பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களின் கலப்படத்தைத் தடுக்க தீவிர சோதனை! – FSSAI உத்தரவு
நவராத்திரி மற்றும் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களின் கலப்படத்தைத் தடுக்க, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உணவுப் பாதுகாப்புச் சோதனைகளைத் தீவிரப்படுத்துமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு வாரியம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.
இனிப்புகள், பால் மற்றும் பால் பொருட்கள், சமையல் எண்ணெய், பானங்கள், கார வகைகள் ஆகியவற்றின் தரத்தைக் தீவிரமாகக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த அதிரடி உத்தரவுகள் வட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்துமா அல்லது தமிழகத்திற்கும் சேருமா என்ற காரசாரமான கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில், பண்டிகைக் காலத்தில் டன் கணக்கில் இனிப்புகளும் கார வகைகளும் விற்பனையாகும் தமிழ்நாட்டில், முக்கிய வணிக மையங்களிலோ அல்லது பிரதான சந்தைகளிலோ FSSAI அதிகாரிகளின் சோதனைகளோ அல்லது ‘ஃபுட் சேஃப்டி ஆன் வீல்ஸ்’ (Food Safety on Wheels) நடமாடும் வாகனங்களின் பரிசோதனைகளோ பெருமளவில் தென்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது.
காகிதளவில் சுற்றறிக்கைகளை அனுப்புவதோடு நிறுத்திவிடாமல், ‘ஃபோஸ்கோஸ்’ (FoSCoS) இணையதளத்தில் உடனுக்குடன் (Real-time) முடிவுகளைப் பதிவேற்றி, தமிழகத்திலும் நேரடிச் சோதனைகளைத் தீவிரப்படுத்தி நுகர்வோரின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் முதன்மையான கோரிக்கையாகும்.
