Tamilசெய்திகள்

6ம் வகுப்பு முதல் கல்வியைப் பாதியில் நிறுத்திய சிறார்களின் கல்வியை மீண்டும் தொடர சிறப்பு திட்டத்தை செயல்படுத்தும் சென்னை மாநகராட்சி

சென்னையில் 6-ஆம் வகுப்பு முதல் கல்வியைப் பாதியில் நிறுத்திய சிறார்களில் பெரும்பாலானோர் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களால் குறிவைக்கப்பட்டு, திசை மாற்றப்பட்டிருந்தது அதிர்ச்சியளிக்கும் தகவலாக வெளியாகியுள்ளது. இவ்வாறு திசைமாறிச் செல்லும் குழந்தைகளை மீட்டு, அவர்கள் மீண்டும் தங்களது கல்வியைத் தொடர சென்னை மாநகராட்சியில் தற்போது சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திலேயே முதன்முதலாகச் சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டு, அதன் மூலம் இடைநிற்றல் குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் சென்னை மாநகராட்சிப் பகுதியில் மொத்தம் 2,091 குழந்தைகள் கல்வியை இடையில் நிறுத்தியிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களில் 1,066 குழந்தைகள் மீண்டும் தங்களது கல்வியைத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடைநிற்றலில் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் 392 பேர், சிறுமியரில் 227 பேர் என மொத்தம் 619 பேர் மாநகராட்சிப் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர 174 சிறார்கள், 222 சிறுமிகள் என மொத்தம் 396 பேர் ஐடிஐ (ITI), பாலிடெக்னிக் உள்ளிட்ட டிப்ளமோ பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், 51 பேரைப் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்டல வாரியாகப் பார்க்கையில் அடையாறில் அதிகபட்சமாக 235 பேர் இடைநின்று 152 பேர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் திருவொற்றியூரில் 233 பேரில் 93 பேரும், தண்டையார்பேட்டையில் 227 பேரில் 88 பேரும், சோழிங்கநல்லூரில் 227 பேரில் 115 பேரும், திரு.வி.க. நகரில் 168 பேரில் 53 பேரும், ராயபுரத்தில் 149 பேரில் 47 பேரும், கோயம்பேட்டில் 142 பேரில் 106 பேரும், தேனாம்பேட்டையில் 122 பேரில் 59 பேரும், வளசரவாக்கத்தில் 115 பேரில் 46 பேரும், ஆலந்தூரில் 115 பேரில் 47 பேரும், அண்ணாநகரில் 113 பேரில் 113 பேரும், மணலியில் 74 பேரில் 38 பேரும், மாதவரத்தில் 70 பேரில் 24 பேரும், பெருங்குடியில் 60 பேரில் 44 பேரும், அம்பத்தூரில் 41 பேரில் 41 பேரும் மீண்டும் கல்விச் சேர்க்கை பெற்றுள்ளனர்.