சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக 474 இடங்களில் 5,176 நவீன இலவச ஒப்பனைகள் அறைகள் அமைப்பு – மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக மொத்தம் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் கூடிய நவீன இலவச ஒப்பனை அறைகள் (Rest Rooms / Dressing Rooms) அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில் நேரில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்தத் தரமான பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. வரும் ஜூன் இறுதிக்குள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்தமாக 1,262 இடங்களில் இதுபோன்ற இலவச ஒப்பனை அறைகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாப்பு, தடையற்ற காற்றோட்டம், முறையான வெளிச்சம் ஆகியவற்றுடன் இந்தக் கழிப்பிடங்கள் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் எவ்வித சிரமமுமின்றி எளிதாகப் பயன்படுத்தும் வகையில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் தனித்தனியாகப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு, உரிய அட்டவணையின்படி தொடர்ந்து சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியாளர்களின் பாதுகாப்பிற்காகக் கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், ரசாயனங்களை முறையாகக் கையாளுதல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் குறித்து அவர்களுக்குத் தொடர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பொதுமக்களின் கருத்துகளை உடனுக்குடன் பெறவும், குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை விரைந்து நிவர்த்தி செய்யவும் பிரத்யேக வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
