Tamilசெய்திகள்

ஒற்றுமையே எனது நோக்கம் – கர்நாடக முதல்வர் குமாரசாமி

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று தொடங்கியது. சாமுண்டி மலையில் நடந்த தசரா விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டார். இந்த விழாவில் பா.ஜனதாவை சேர்ந்த எம்.பி. பிரதாப் சிம்ஹாவும் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், மகிஷாசூரன் தசரா விழாவுக்கு மாநில அரசு அனுமதி கொடுத்திருக்க கூடாது என்றும், திப்பு ஜெயந்தி விழாவுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்றும் பேசினார்.

இதையடுத்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலை, கலாமந்திராவில் நடந்த திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவை முடித்துவிட்டு வெளியே வந்த குமாரசாமியிடம், பிரதாப் சிம்ஹா எம்.பி. பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து குமாரசாமி கூறியதாவது:-

ஒரு விழாவை கொண்டாடுவது அந்த அமைப்புகளின் சொந்த விஷயம். இதில் அரசு தலையிடாது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் தான் அரசு தலையிடும். சாதி, மதம் மற்றும் மொழியை ஆன்மிக விஷயத்தோடு தொடர்புப்படுத்த கூடாது. எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும், எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்பது மாநில அரசுக்கு நன்றாக தெரியும்.

திப்பு ஜெயந்தி கொண்டாடுவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கும். அனைத்து மக்களையும் ஒற்றுமையாக அரவணைத்து செல்வதே என்னுடைய நோக்கம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *