Tamilசெய்திகள்

மகள் திருமணத்திற்காக ராஜீவ் கொலை வழக்கு கைதி முருகன் பரோல் கேட்டு மனு தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும், அவரது கணவர் முருகன் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை செய்ய நளினி பரோல் கேட்டு விண்ணப்பத்திருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு ஐகோர்ட்டு ஒரு மாதம் பரோல் வழங்கியது.

கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி பரோலில் வந்த நளினி வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளார்.

கடந்த மாதம் 25-ந்தேதியுடன் நளினியின் ஒருமாத கால பரோல் முடிவடைய இருந்தது. இதற்கிடையே அவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் பேரில் மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் முருகன் தனது மகள் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒருமாதம் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு மனு அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவரது வக்கீல் புகழேந்தி கூறியதாவது:-

மகள் திருமண ஏற்பாடுகளை செய்ய நளினி சத்துவாச்சாரியில் தங்கியுள்ளார். அவரது கணவர் முருகனும் தற்போது பரோல் கேட்டு சிறைத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அவர் பிரம்மபுரத்தில் தங்கி திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *