அஜித்தின் 59வது படம்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
`விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தல 59 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து போனி கபூர் கூறும் போது, வித்யாபாலன் தமிழில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. அவர் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார். அவருக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ரங்கராஜ் பாண்டே ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கோகுல் சந்திரன் படத்தொகுப்பையும், திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளையும், கே.கதிர் கலை பணிகளையும், பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பையும் கவனிக்கிறார்கள்.
அஜித் பற்றி போனி கபூர் கூறும்போது, “இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்தில் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை கிடைக்கவில்லை. ‘பிங்க்’ படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை அஜித் தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்பதால் அதனை உருவாக்குகிறோம். அத்துடன் அஜித்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணைவது மகிழ்ச்சி. பிங்க் ரீமேக்கை மே 1-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அஜித்துடனான இரண்டாவது படம் 2020 ஏப்ரலில் திரைக்கு வரும். எச்.வினோத் போன்ற சிறந்த இயக்குநர் அமைந்ததில் மகிழ்ச்சி என்றார்.