Tamilசெய்திகள்

அமராவதி ஆற்றில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

அமராவதி ஆறானது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உற்பத்தியாகி கரூரில் பாய்ந்தோடி திருமுக்கூடலூர் பகுதியிலுள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது. திருப்பூர் அமராவதி அணையில் தண்ணீர் அதிகளவு நிரம்பும் போது தான் காட்டாற்று வெள்ளமாக அமராவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் கரூரில் தற்போது தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி வீடுகள் ஆகியவை பெருகி விட்டதால் கழிவுநீரை வெளியேற்றுவதில் முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் கரூர், திருமாநிலையூர், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேராக ஆற்றில் கலந்து தான் ஓடுகிறது.

இதன் காரணமாக கரூர் அமராவதிபாலம், பசுபதிபாளையம் ஆற்று பாலத்தில் வாகனங்களில் செல்வோர் துர்நாற்றத்தை பொறுத்து கொள்ள முடியாமல் மூக்கினை பிடித்து கொண்டே செல்வதை காண முடிகிறது. மேலும் கழிவுநீர் ஒருபுறம் ஓடினாலும், மற்றொரு புறம் சாயக்கழிவுநீர் ஆற்றில் கலப்பதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், கரூரில் உள்ள அமராவதி ஆற்றில் கலக்கும் கழிவு நீர் பாதைகள் அடைக்கப்படும் எனவும் கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் ஒரு பைசா கூட வரி உயராது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.