Tamilசெய்திகள்

அமெரிக்காவாழ் இந்தியர்களிடம் ஜூன் 23 ஆம் தேதி பிரதமர் மோடி பேசுகிறார்

பிரதமர் மோடி இம்மாதம் 21-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின்பேரில் அவர் செல்கிறார். 22- ந் தேதி, அவர் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அன்று இரவு, ஜோ பைடனும், ஜில் பைடனும் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கிறார்கள். 23-ந் தேதி, அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இத்தகவலை அமெரிக்க இந்திய சமுதாய தலைவர் டாக்டர் பாரத் பராய் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- அமெரிக்காவில் சிகாகோவில் ஒரு பிரமாண்ட அரங்கத்தில் 40 ஆயிரம் இந்தியர்களிடையே பிரதமர் மோடியை உரையாற்ற வைக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால், நிகழ்ச்சி நிரல் உறுதி செய்யப்படாததால், அதை இறுதி செய்ய முடியவில்லை.

இறுதியாக, 23- ந் தேதி மாலையில், எங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார். எனவே, வாஷிங்டனில் உள்ள ரொனால்டு ரீகன் கட்டிடம் மற்றும் சர்வதேச வர்த்தக மையம், பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த அரங்கம்,  900 இருக்கை வசதி கொண்டது. பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. 23-ந் தேதி மாலை, அமெரிக்க இந்தியர்களிடையே அங்கு பிரதமர் மோடி உரையாற்றுவார். அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்தியாவின் வளர்ச்சி பாதையில் வெளிநாட்டு இந்தியர்களின் பங்கு குறித்து அவர் பேசுவார். அத்துடன், அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்கு திரும்புவார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.  25 பிரபலங்களை கொண்ட தேசிய அமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, பிரதமர் மோடி வருகை குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2 அமெரிக்க எம்.பி.க்கள் பேசினர். ரிச் மெக்கார்மிக் என்ற எம்.பி. பேசியதாவது:-

பிரதமர் மோடியின் முக்கிய வருகை குறித்து பேச இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். உலகில் நாம் கொண்டுள்ள முக்கியமான உறவுகளில் இதுவும் ஒன்று. இருநாடுகளிடையே நல்லெண்ணத்தை பரப்ப அந்த மனிதர் அமெரிக்கா வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். ஜோ வில்சன் என்ற எம்.பி. பேசுகையில், ”அமெரிக்க- இந்திய நட்புறவு குறித்து பிரதமர் மோடி தனது முந்தைய பயணத்தில் விளக்கி கூறியுள்ளார்” என்றார்.