Tamilசெய்திகள்

ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பகல் 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2021- 22-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழகத்தில் தொழில் துறை தொடர்பான முக்கிய திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நிதி நிலை அறிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழக நிதித்துறை மேற்கொண்டு வருகிறது. இது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் 2021- 22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டதால் அ.தி.மு.க. அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து இருந்தது. தற்போது தி.மு.க. அரசு முழுமையான பட்ஜெட்டை தயாரித்துள்ளது.

அதுமட்டுமின்றி வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்து அதற்காக திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் இன்று அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.

பொது பட்ஜெட்டிலும், வேளாண்மைத்துறை பட்ஜெட்டிலும் பல முக்கிய தகவல்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறைவாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து அவர் தீவிர ஆய்வு செய்தார். அந்த ஆய்வுப்பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றுவிட்டன. அந்த திட்டங்களை பட்ஜெட்டில் இடம்பெறச் செய்வது குறித்தும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதையடுத்து சட்டசபையில் வரும் ஆகஸ்ட் 13ந்தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார்.

வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டம் நிறைவு பெற்றது.