உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழையால் கங்கை நதியின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவான 293 மீட்டரை எட்டியது!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் மேலடுக்கு அணைகளில் இருந்து திறக்கப்படும் அதிகப்படியான உபரி நீர் காரணமாக, ஹரித்வாரில் உள்ள பீம்கோடா தடுப்பணை அருகே கங்கை நதியின் நீர்மட்டம் ஆபத்தான முறையில் உயர்ந்து, எச்சரிக்கை அளவான 293 மீட்டரை எட்டியுள்ளது.
இதனால் கரையோர மற்றும் தாழ்வான கிராமப் பகுதிகளில் வெள்ள அபாயம் உருவாகியுள்ளதை அடுத்து, மாவட்ட நிர்வாகமும் நீர்ப்பாசனத் துறையும் இணைந்து அவசர வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் வெள்ளத் தடுப்பு முகாம்கள் அனைத்தும் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, ஆபத்தான நீர்நிலைப் பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கிகள் மூலம் தொடர் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நிலைமை தீவிரமடைந்து வருவதால், என்.டி.ஆர்.எஃப் (NDRF) மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் (SDRF) மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு, நிலைமையை அதிகாரிகள் உடனுக்குடன் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
