ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு – அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் (ஜாக்டோ ஜியோ) வருகிற 4-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
கஜா புயல் பாதிப்பில் இருந்து டெல்டா மாவட்டங்கள் இன்னும் மீள முடியாத நிலையில் உள்ளதால் இந்த போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகலில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
இதில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியம் (தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம்) மாயவன் (தமிழ்நாடு உயர் நிலை-மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்) மீனாட்சி சுந்தரம் (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்), வெங்கடேசன் (தலைமைச் செயலகம்) உள்ளிட்ட 20 அமைப்பினர் பங்கேற்கின்றனர்.
ஏற்கனவே அமைச்சர் டி.ஜெயக்குமாரை சந்தித்து பேசிய மற்ற நிர்வாகிகள் கூறும்போது, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அமைச்சர் கனிவுடன் கேட்டதாகவும், தேவைப்பட்டால் முதல்-அமைச்சரை சந்தித்து பேச ஏற்பாடு செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்தனர்.