Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 294 ரன்களும், ஆஸ்திரேலியா 225 ரன்களும் எடுத்தன. 69 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஜோ டென்லி (94 ரன்), பென் ஸ்டோக்ஸ் (67 ரன்) ஆகியோரது அரைசதங்களின் உதவியுடன் 3-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 313 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது நாள் ஆட்டத்தின் போது, அவ்வப்போது சீண்டல்கள் தலைதூக்கின. இரவு விடுதி ஒன்றில் குடித்து விட்டு பென் ஸ்டோக்ஸ் வாலிபரை தாக்கிய சர்ச்சையை ஆஸ்திரேலிய வீரர்கள் கிளப்ப, அதற்கு பதிலடியாக ஸ்டோக்ஸ், வார்னரை கெட்ட வார்த்தையால் வர்ணித்தார்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து 329 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 4 விக்கெட்டுகளும், கம்மின்ஸ், பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் 300 ரன்களுக்கு மேலான ஸ்கோரை யாரும் விரட்டிப்பிடித்ததில்லை. மலைப்பான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மார்கஸ் ஹாரிஸ் (9 ரன்), ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.
தொடர்ந்து தடுமாறும் மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னரும் (11 ரன்), பிராட்டின் பந்து வீச்சில் ‘ஸ்லிப்’பில் நின்ற ஜோ பர்ன்சிடம் சிக்கினார். நடப்பு தொடரில் பிராட்டின் பந்து வீச்சுக்கு வார்னர் இரையாவது இது 7-வது முறையாகும். அத்துடன் வார்னர் இந்த தொடரில் 10 இன்னிங்சில் வெறும் 95 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இதன் பின்னர் மார்னஸ் லபுஸ்சேனும், முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் ஜோடி சேர்ந்தனர். இவர்களைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருந்தது. ஆனால் அவர்களும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. லபுஸ்சேன் (14 ரன்), ஜாக் லீச்சின் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் ஸ்டீவன் சுமித் 23 ரன்களில் (53 பந்து, 4 பவுண்டரி) பிராட்டின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அதாவது பிராட் ‘ஷாட்பிட்ச்’சாக இடுப்பளவுக்கு எழும்பி வரும் வகையில் வீசிய பந்தை சுமித் தட்டிவிட்டபோது ‘லெக் ஸ்லிப்’பில் நிறுத்தப்பட்டிருந்த பென் ஸ்டோக்ஸ் அதை சாதுர்யமாக கேட்ச் செய்தார். இந்த தொடரில் சுமித்தின் குறைந்த ஸ்கோர் இதுதான். மொத்தத்தில் இந்த ஆஷஸ் தொடரில் அவர் 774 ரன்கள் குவித்து இருப்பது கவனிக்கத்தக்கது.
சுமித்தின் வெளியேற்றத்துக்கு பிறகு இங்கிலாந்தின் கை ஓங்கியது. ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் (24 ரன்), கேப்டன் டிம் பெய்ன் (21 ரன்) சீரான இடைவெளியில் நடையை கட்டினர்.
இந்த நெருக்கடிக்கு இடையே அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்டெடுக்க மேத்யூ வேட் போராடினர். ஆனால் அவர் சதம் அடித்தது மட்டுமே அந்த அணிக்கு கிடைத்த ஆறுதலாகும். தனது 4-வது சதத்தை நிறைவு செய்த மேத்யூ வேட் (117 ரன், 166 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்) பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ஜோ ரூட்டின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் ஆனார்.
முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 77 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச் தலா 4 விக்கெட்டுகளும், ஜோ ரூட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட 2-வது டெஸ்ட் மட்டும் டிராவில் முடிந்தது. 1972-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஆஷஸ் தொடர் சமன் ஆகியிருப்பது நினைவு கூரத்தக்கது. அதே சமயம் நடப்பு சாம்பியன் என்ற வகையில் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்துக் கொண்டது.
முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அறுவடை செய்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருதையும், பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *