Tamilவிளையாட்டு

இந்தியா, இலங்கை மோதும் முதல் டி20 போட்டி இன்று மும்பையில் நடக்கிறது

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பங்கேற்க ஷனகா தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் கொழும்பில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்து சேர்ந்தனர்.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இன்று  மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பேட்டிங்கில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், சுப்மன் கில், ராகுல் திரிபாதி ஆகிய வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், சாகல், அக்சர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக் ஆகியோர் உள்ளனர். ஆல் ரவுண்டர்கள் தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.

முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ள இந்திய அணி, 20 ஓவர் போட்டியில் சாதிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய போட்டியில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இலங்கை அணியில் அவிஷ்க பெர்னாண்டோ, குஷல் மெண்டீஸ், தனஞ்செய டிசில்வா, ஹரன்கா, அசலங்கா, கருரத்னே, நிசாங்கா, தீக்ஷனா, லகிரு குமார பனுகா ராஜபக்சே, ரஜிதா போன்ற வீரர்கள் உள்ளனர்.

அந்த அணி வீரர்கள் சமீபத்தில் இலங்கை பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி இருந்தனர். இந்திய சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக நடந்த போட்டியில் இலங்கை வீரர்கள் நல்ல அனுபவத்தை பெற்று இருப்பார்கள். இது தங்களுக்கு இந்திய சுற்றுப்பயணத்தில் உதவும் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இப்போட்டி தொடர் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்தியா:

ஹர்த்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், சுப்மன் கில், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், அக்சர் பட்டேல், சாகல், ஷிவம் மவி, முகேஷ் குமார், உம்ரான் மாலிக்.

இலங்கை:

தசுன் ஷனகா (கேப்டன்), அவிஷ்க பெர்னாண்டோ, அசலாங்கா, அஷேன் பண்டார, தனஞ்செய டிசில்வா, நிசாங்கா, ஹசரன்கா, குஷல் மெண்டிஸ், பனுகா ராஜபக்சே சமிகா, கருண ரத்னே, லகிரு குமாரா, மதுஷன்கா, பிரமோத் மதுஷன், ரஜிதா, தீக்ஷனா, சமரா விக்ரமா, துஸத் வெல்லுகே, நுலன் துஷாரா.