இலங்கைக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி – வெற்றி விளிம்பில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 271 ரன்கள் சேர்த்தது.
80 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை இந்த டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தானின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடக்க வீரர்களான ஷான் மசூத் – அபித் அலி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. ஷான் மசூத் 135 ரன்களும், அபித் அலி 174 ரன்களும் விளாசினர். அடுத்து வந்த கேப்டன் அசார் அலி 118 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் நட்சத்திர வீரரான பாபர் அசாம் 131 பந்தில் 100 ரன்கள் சேர்த்தார்.
முதல் இன்னிங்சில் தடுமாறிய நான்கு வீரர்களும் 2-வது இன்னிங்சில் சதம் அடித்தனர். இதனால் பாகிஸ்தான் இன்றைய 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 553 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
475 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை அணிக்கு 476 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி ஆகியோரின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.
தொடக்க வீரர் ஒஷாடா பெர்னாண்டோ மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். ஒரு கட்டத்தில் இலங்கை 97 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. 6-வது விக்கெட்டுக்கு பெர்னாண்டோ உடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. பெர்னாண்டோ சதமும், டிக்வெல்லா அரைசதமும் அடித்தனர்.
இதனால் நான்காவது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்தனர். இந்நிலையில்தான் டிக்வெல்லா 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி104 ரன்கள் சேர்த்தது.
அடுத்து வந்த தில்ருவான் பெரேரா 5 ரன்னில் ஆட்டமிழக்க நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்துள்ளது. ஒஷாடா பெர்னாண்டோ 102 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.
இலங்கை அணிக்கு இன்னும் 264 ரன்கள் தேவை. கைவசம் 3 விக்கெட்டுக்கள் மட்டுமே உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், 10 வருடத்திற்குப் பிறகு சொந்த மண்ணில் வெற்றியை ருசிக்கும்.