இலங்கை தாக்குதல் குறித்து உளவுத்துறை அதிகாரி வாக்கு மூலம் – சிறிசேனா நிராகரிப்பு
இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தினர். அதில், 253 பேர் பலியானார்கள்.
இந்த தாக்குதல் குறித்த சதித்திட்டத்தை இலங்கை அரசுக்கு இந்திய உளவு அமைப்புகள் முன்கூட்டியே தெரிவித்தன. இருப்பினும், இலங்கை அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த உளவுத்துறை தகவல் குறித்து தனக்கு முன்கூட்டியே தெரியாது என்று அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் மற்றும் தாக்குதலை தடுக்கத் தவறியதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பது பற்றி விசாரிக்க நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவை சிறிசேனா கட்சியும், ராஜபக்சே கட்சியும் புறக்கணித்து வருகின்றன.
இந்த குழு முன்பு, இலங்கை உளவுத்துறை தலைவர் சிசிறா மென்டிஸ் நேற்று முன்தினம் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி, உளவுத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. அதில் அதிபர் சிறிசேனாவும் பங்கேற்றார். பயங்கரவாத தாக்குதல் குறித்த உளவு தகவல் பற்றி அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம்.
அந்த தகவலை கூட்டத்தில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், அந்த தகவல் குறித்து போலீஸ் ஐ.ஜி.க்கு கடிதம் எழுதினேன். ‘முக்கியமான தகவல்‘ என்பதை குறிப்பதற்கான வாசகத்தையும் அதில் எழுதினேன்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
ஆனால், உளவுத்துறை தலைவர் சிசிறா மென்டிஸ் கூறியதை அதிபர் சிறிசேனா நேற்று நிராகரித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உளவுத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் 2 மணி நேரமாக நடந்தது. ஆனால், பயங்கரவாத தாக்குதல் குறித்த உளவு தகவலை எந்த அதிகாரியும் தெரிவிக்கவில்லை. எனவே, தாக்குதல் குறித்து எனக்கு முன்கூட்டியே தெரியாது” என்று கூறியுள்ளார்.