Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – வங்காளதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் கார்டிப்பில் உள்ள சோபியா கார்டனில் நேற்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக மொயீன் அலிக்கு பதிலாக பிளங்கெட் சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச கேப்டன் மோர்தசா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்து அணியின் இன்னிங்சை ஜானி பேர்ஸ்டோவும், ஜாசன் ராயும் தொடங்கினர். சில ஓவர்கள் நிதானம் காட்டிய இவர்கள் அதன் பிறகு வங்காளதேச பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். ஓவருக்கு குறைந்தது ஒரு பவுண்டரி, அதன் பிறகு ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் ஓடி எடுப்பது என்ற திட்டமிடலுடன் அருமையாக ஆடிய இங்கிலாந்து வீரர்கள் 15-வது ஓவரில் 100 ரன்களை எட்ட வைத்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் (19.1 ஓவர்) சேர்த்து பிரிந்தது. பேர்ஸ்டோ 51 ரன்களில் (50 பந்து, 6 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து ஜோ ரூட் வந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய ஜாசன் ராய் 92 பந்துகளில் தனது 9-வது சதத்தை நிறைவு செய்தார். இந்த உலக கோப்பையில் பதிவான 4-வது சதம் இதுவாகும். செஞ்சுரிக்கு பிறகு சிறிது நேரமே நின்றாலும் வாணவேடிக்கை காட்டினார். ஷகிப் அல்-ஹசனின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசனின் பந்து வீச்சில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் பறக்கவிட்டு உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஜாசன் ராய் மேலும் ஒரு சிக்சருக்கு பந்தை தூக்கிய போது கேட்ச் ஆகிப்போனார். ஜாசன் ராய் 153 ரன்கள் (121 பந்து, 14 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். இதற்கிடையே ஜோ ரூட் 21 ரன்னில் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து ஜோஸ் பட்லரும், கேப்டன் மோர்கனும் இணைந்து உத்வேகம் குறையாமல் ஸ்கோரை எகிற வைத்தனர். வங்காளதேசத்தின் பந்து வீச்சில் துல்லியம் இல்லை, பீல்டிங்கிலும் ஏகப்பட்ட ஓட்டை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்து வீரர்கள், எதிரணியை கதறடித்தனர். பட்லர் தூக்கியடித்த ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே காணாமல் போனது.

இமாலய ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்த பட்லர் தனது பங்குக்கு 64 ரன்களும் (44 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), மோர்கன் 35 ரன்களும் (33 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வீரர்களும் குறிப்பாக கிறிஸ் வோக்ஸ் 2 சிக்சருடன் 18 ரன்களும், பிளங்கெட் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 27 ரன்களும் (9 பந்து) விளாசி அசத்தினர்.

இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 386 ரன்கள் குவித்தது. இந்த அணி பேட்ஸ்மேன்கள் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 111 ரன்களை திரட்டினர்.

அடுத்து 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு கட்டத்தில் இலக்கை நெருங்க முடியாது என்பதை உணர்ந்த வங்காளதேச பேட்ஸ்மேன்கள் ரன்ரேட் அவசியம் என்பதால் அதற்காக ஆடினர். ஷகிப் அல்-ஹசன் (121 ரன், 119 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) சதம் அடித்தது மட்டுமே வங்காளதேசத்திற்கு கிடைத்த ஒரே ஆறுதல் ஆகும்.

அந்த அணி 48.5 ஓவர்களில் 280 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது லீக்கில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு இது 2-வது வெற்றியாகும். அத்துடன் 2015-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் வங்காளதேசத்திடம் அடைந்த தோல்விக்கும் இங்கிலாந்து பழிதீர்த்துக் கொண்டது. வங்காளதேச அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *