உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நடைபெற்றது. அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் ஆட்டம் 49-வது ஓவராக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் குயின்டன் டி காக், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். டி காக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த டு பிளிசிஸ் 23 ரன்களும், மார்கிராம் 38 ரன்களும் சேர்த்தனர். ஹசிம் அம்லா 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 37 பந்தில் 36 ரன்களும், வான் டெர் டஸ்ஸன் 64 பந்தில் 67 ரன்கள் எடுக்கவும் தென்ஆப்பிரிக்கா 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் நியூசிலாந்தின் வெற்றிக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந் அணி வீரர்கள் மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலே நியூசிலாந்து அணி வீரர் காலின் முன்ரோ 9 (5) ரன்கள் எடுத்திருந்த போது ரபடா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கினார். கப்தில் மற்றும் வில்லியம்சன் இணைந்து நின்று ரன்களை உயர்த்த தொடங்கினர். இவர்களின் ஜோடியை பிரிக்க நினைத்த தென்ஆப்பிரிக்கா வீரர் பெலக்வாயோ ஆட்டத்தின் 14.6 வது ஓவரில் குப்தில் 35 (59) விக்கெட்டை எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய ராஸ் டெய்லர் 1 (2), டாம் லாதம் 1 (4), ஜேம்ஸ் நீஷம் 23 (34) வந்த வேகத்தில் அவுட்டாகினர். தென் ஆப்பிரிக்கா வீரர் கிறிஸ் மோரிஸ் தொடர்ந்து அடுத்தடுத்த ஓவரிரில் நியூசிலாந்து அணியின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கிரான்ட்ஹோம் களம் இறங்கினர். கிரான்ட்ஹோம் மற்றும் அணியின் கேப்டன் வில்லியம்சன் இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ரன்களை உயர்த்த தொடங்கினர். இதனிடையே 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து வீரர் கிரான்ட்ஹோம் 60 (47) ரன்கள் எடுத்திருந்த போது நிகிடி வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து அணி விளையாடியது. ஆட்டத்தின் 48.1வது ஓவரில் ஒரு ரன்கள் எடுத்தது. அடுத்ததாக அணியின் கேப்டன் வில்லியம்சன் 48.2 வது ஓவரில் சிக்சர் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 48.3 ஓவர் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி வீரர் மிட்செல் சான்ட்னெர் மற்றும் வில்லியம்சன் இருவரும் களத்தில் கடைசி வரை நின்று விளையாடினர்.
நியூசிலாந்து அணி தரப்பில் மார்ட்டின் கப்தில் 35 ரன்களும், கிரான்ட்ஹோம் 60 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 106 ரன்களும் எடுத்தனர்.
தென்ஆப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட், பெலக்வாயோ, ரபடா மற்றும் நிகிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.