உலகக்கோப்பை தொடரில் அனைத்து அணிகளையும் வெஸ்ட் இண்டீஸ் அச்சுறுத்தும் – பிராவோ
இங்கிலாந்தில் மே 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பையை இங்கிலாந்து, இந்தியா போன்ற அணிகள் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
ஆனால் கடந்த வாரம் முடிவடைந்த வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. இந்தத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
குறிப்பாக நீண்ட இடைவெளிக்குப்பின் அணிக்கு திரும்பிய கிறிஸ் கெய்ல் இரண்டு சதங்கள், இரண்டு அரைசதங்கள் விளாசினார். அதோடு பந்து வீச்சாளர்களும் சோபித்தனர். கடைசி ஒருநாள் போட்டியில் தாமஸ் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து 113 ரன்னில் சுருண்டது.
இந்நிலையில் உலகக்கோப்பையில் அனைத்து அணிகளுக்கும் வெஸ்ட் இண்டீஸ் அச்சுறுத்தலாக இருக்கும் என வெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெயின் பிராவோ கூறுகையில் ”எங்களது அணியில் சிறந்த இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஆட்டத்திறனில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். நம்பர் ஒன் அணியான இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியதை பார்க்கும்போது சிறப்பாக இருந்தது.
நாங்கள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், மற்ற வீரர்களிடமும் பேசினேன். இந்த அணி உலகக்கோப்பையில் அனைத்து அணிகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும். யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய நாட்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால், அனுபம் மற்றும் இளைஞர்களின் காம்பினேசன் சிறப்பாக உள்ளது” என்றார்.