Tamilசெய்திகள்

எதிர்க்கட்சிகள் ஓட்டுக்காக போராட்டம் நடத்துகின்றன – இல.கணேசன்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகளை கண்டித்து மதுரை முனிச்சாலையில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

“பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்த குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரம் இல்லை.

இந்தியாவில் வாழும் 5,500 ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. கமல் இலங்கையில் உள்ள தமிழர்களை இந்துக்கள் என கூறி இருப்பது மகிழ்ச்சி.

குடியுரிமை சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாட்டுக்காக போராடவில்லை ஓட்டுக்காக போராடி வருகின்றனர்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக வாழுகின்றனர். இந்தியா முழுவதும் லஞ்சத்தை ஒழிக்க பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் முதலில் சிக்கியது ப.சிதம்பரம் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவில் உள்ள வரலாற்று பிழைகளை பிரதமர் திருத்தி வருகிறார், வரலாறு தெரியாதவர்கள் வரலாற்றை மறந்தவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.

குடியுரிமை சட்டம் குறித்து மக்கள் மத்தியில் தவறான பிரசாரம் செய்யப்படுகிறது.

குடியுரிமை இல்லாமல் பாகிஸ்தானில் இருந்து வந்த 31 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து யாரையும் வெளியேற்ற வேண்டும் என்பது இந்த சட்டத்தின் நோக்கம் அல்ல. பொய் பிரசாரத்தை நம்பாமல் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டு முதல் குடியுரிமை சட்டம் வரை தமிழகத்தில் பிரதமருக்கு எதிராக நடந்த போராட்டங்கள் வெற்றி பெறவில்லை. அதே போல் தற்போதும் நடக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *