Tamilசினிமா

என்னை பாலியல் தொழிலாளி என்று சொன்னால் தலை குனிய மாட்டேன் – சின்மயி ஆதங்கம்

பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறினார். இது கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் பரபரப்பான செய்தியானது. இதன் பின்னர் ராதாரவியுடன் மோதல் தொடங்கியது.

ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்டது என்பதே பொய் என்று டுவிட்டரில் கடித ஆதாரத்துடன் கூறிய சின்மயி, மீண்டும் அது தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

நேற்று முகநூலில் நேரடி வீடியோவில் பேசிய அவர், மீடூ பற்றி பல்வேறு வி‌ஷயங்களை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து தன்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்க ராதாரவி சதி செய்திருப்பதாகக் கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது:-

“நான் 2016ல் இருந்தே டப்பிங் யூனியன் உறுப்பினர் இல்லை என்று சொல்லும் ராதாரவி, கடந்த 2 ஆண்டுகளில் 4 படங்களில் டப்பிங் பேச ஏன் ஒப்புக் கொண்டார்? டப்பிங் யூனியன் உறுப்பினர்களிடம் வசூலிக்கப்படும் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு, எதற்காக டத்தோ ராதாரவி வளாகம் எனப் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்?

மீடூ புகார் எல்லாம் சொன்னால் இனி நீங்கள் நடிக்கவே வராதீர்கள். ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள் என ஏன் எச்சரிக்கிறார்?

ராதாரவி டத்தோ பட்டத்தை பயன்படுத்திக் கொள்வதில் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், அதை அவருடைய லெட்டர் பேட், டப்பிங் வளாகக் கட்டிடம் என எல்லா வற்றிலும் பயன்படுத்திய தாலேயே நான் அதைப் பற்றி ஆராய்ந்தேன். அப்போது தான் மெலாகா அரசு டத்தோ பட்டம் தரவே இல்லை என்பது தெரிய வந்தது.

பின்னர் இப்போது அதை சுல்தான் ஒருவர் வழங்கினார் என்றார். அது எந்த சுல்தான் அல்லது எந்த தொழிலதிபர் என்று சொல்லலாம் அல்லவா? ராதாரவி அவருக்கு அவரே பாரத ரத்னா, பத்மஸ்ரீ என என்ன விருது வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளட்டும். எனக்கு அதைப் பற்றி சிறிதும் கவலை இல்லை.

ஆனால், டப்பிங் யூனியனில் விசாகா குழு இருக்கிறது என்று அவர் கூறினால், பணியிடம் என்று எதைக் குறிப்பிடுவார் என்று கேள்வி கேளுங்கள். மீடூ பிரச்சினை வந்தது முதல் ஆண்களிடம் கேள்வி கேட்பதற்கும், பெண்களிடம் கேள்வி கேட்பதற்கும் இடையே அவ்வளவு வித்தியாசம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

பாலியல் வன்கொடுமைகளை மறைக்காதீர்கள். இதை மூடி மறைக்கக்கூடாது. வெட்கப்பட வேண்டியது பெண்களும் குழந்தைகளும் கிடையாது என்பதே மீடூவின் அடிநாதம். பெண்களுக்கு மட்டும் இது நிகழ்வதில்லை. ஆண் குழந்தைகளுக்கும் நிகழ்கிறது. என்னிடம் நிறைய ஆண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை சொல்லியிருக்கின்றனர். இது நம்மை நாமே கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய தருணம்.

ஆனால், இன்றும்கூட பாதிக்கப்பட்டவர்களை விடுத்து பாதிப்புக்கு உள்ளாக்கியவர்களை பலப்படுத்தவே இந்த சமூகம் முற்படுகிறது. பெண்கள் சொல்லும் புகார் மீதான சமூகத்தின் அமைதி பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் பலமாக்கும். மீடூவில் நான் புகார் சொன்ன பிறகு. நிறைய பெண்கள் என்னை இந்த சமூக வலைதளங்கள் எப்படிப் பார்க்கிறது என்று உற்று நோக்கினார்கள்.

என்னை அவ்வளவு வசைபாடுகிறார்கள். தமிழில் இருக்கும் எல்லா கெட்ட வார்த்தைகளை சொல்லித்தந்த தமிழ் ஆண்மகன்களுக்கும் நன்றி. நீ யோக்கியமா? நீ ஒழுக்கமா? நீ உத்தமியா என்று கேட்பார்கள். அப்புறம் என்னை பாலியல் தொழிலாளி என்பார்கள். ஒரு வி‌ஷயம் சொல்கிறேன். நீங்கள் என்னை பாலியல் தொழிலாளி எனக் கூறுவதால் நான் வெட்கித் தலை குனிய மாட்டேன்.

இந்த உலகிலேயே ஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில். ஆண்களின் பல்வேறு பாலியல் தேவைக்காகவே இந்தத் தொழில் இருக்கிறது. ஒருவேளை அந்த தொழிலாளிகள் எல்லாம் திருந்திவந்தால் நீங்கள் சமூகத்தில் அவர்களுக்கு இடமா கொடுக்கப் போகிறீர்கள்? இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

உங்கள் வீட்டு பெண்கள் பாலியல் புகார் சொன்னால், வேலைக்கு போகாதே படிக்கப் போகாதே என்று வீட்டுக்குள் பூட்டி வைக்காதீர்கள். தப்பு செய்தவர்களை திருத்துங்கள். பாதிக்கப்பட்டவரை கேவலப்படுத்தாதீர்கள், அசிங்கப்படுத்தாதீர்கள். பாலியல் வன்கொடுமைகள் ஏன் நடக்கிறது. எதற்கு நடக்கிறது என்று பேசுங்கள். குடும்பம், கல்வி நிறுவனம், பணியிடம் என எல்லா இடத்திலும் பேசுங்கள். ஆண்களும் நம்மை புரிந்து கொள்வார்கள். எதுவாக இருந்தாலும் பேசி முடிவு செய்யலாம். சமூகம் அதற்கான மாற்றம் கண்டு வருகிறது.

திருமணத்துக்குப் பின் கணவன் மனைவியின் விருப்பம் இல்லாமல் உறவு கொண்டால் அது மேரிட்டல் ரேப் என்று பேசும் அளவுக்கு இப்போதெல்லாம் சமூக மாற்றம் வந்திருக்கிறது. இன்னும் மாற்றம் வர வேண்டுமானால் அதற்கு விவாதமும் ஆலோசனையும் செய்யப்பட வேண்டும். எனவே வெளிப்படையாக பேசுங்கள். இதில் நீங்கள் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. இன்று சமூகம் சில விமர்சனங்களை முன்வைத்தாலும்கூட விரைவில் மாற்றம் வரும்’

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *