Tamilவிளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை – 7 வது இடத்திற்கு தள்ளப்பட்ட விராட் கோலி

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 4-வது இடத்தையும், இந்திய அணியின் மற்றொரு வீரரான ரோகித் சர்மா 5-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில்  ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும், தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் ஷாஹின் அப்ரிடி 3-வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளனர்.

ஐசிசி வெளியிட்டுள்ள டி20 பேட்டிங் தரவரிசைப்பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், இங்கிலாந்து அணியின் டாவிட் மலன் ஒரே புள்ளிகளை பெற்று  முதலிடத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் முகமது ரஸ்வான் 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் கே.எல்.ராகுல் மட்டும் 5-வது இடத்தை பெற்றுள்ளார்.