Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் – கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

ஐ.பி.எல். 2021 தொடரின் 45-வது லீக் ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெங்கடேஷ் அய்யர் (49 பந்தில் 67 ரன்), திரிபாதி (26 பந்தில் 34 ரன்), நிதிஷ் ராணா (18 பந்தில் 31 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்தனர். மயங்க் அகர்வால் 27 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 70 ரன்கள் சேர்த்தது.

அதன்பின் வந்த நிக்கோலஸ் பூரண் 12 ரன்னிலும், மார்கிராம் 18 ரன்னிலும், தீபக் ஹூடா 3 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. என்றாலும் மறுமுனையில் அரைசதம் அடித்து போரட்டத்தில் ஈடுபட்டார் கே.எல். ராகுல்.

5-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஷாருக்கான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 21 பந்தில் 32 ரன்கள் என்ற நிலையில் களம் இறங்கிய ஷாருக்கான் 17-வது ஓவரின் 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். சவுத்தி வீசிய அடுத்த ஓவரில் பவுண்டரி ஒன்று விளாசினார். இதனால் பஞ்சாப் அணிக்கு சற்று நெருக்கடி குறைந்து கடைசி இரண்டு ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது.

ஷிவம் மாவி வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தையும், கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார் கே.எல். ராகுல். இதனால் பஞ்சாப் அணிக்கு 10 ரன்கள் கிடைக்க கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை வெங்கடுஷ் அய்யர் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்ட நிலையில், 2-வது பந்தில் கே.எல். ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 55 பந்தில் 67 ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 4 பந்தில்  4 ரன்கள் தேவைப்பட்டது. ஷாருக்கான் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்க பஞ்சாப் கிங்ஸ் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷாருக்கான் 9 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.