Tamilசெய்திகள்

அதிக இடர்வாய்ப்புள்ள சிகிச்சைகளுக்கென பிரத்தியேகமான, சிறப்பு இதய சிகிச்சைத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்

மேம்பட்ட இதய சிகிச்சைகளில் தலைசிறந்த மையமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு, ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட், மிகவும் சிக்கலான மற்றும் அதிக இடர்வாய்ப்புள்ள இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘CHIP’ எனப்படும் சிறப்பு இதய சிகிச்சைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய நவீன தொழில்நுட்பம், பல்துறை மருத்துவர்களின் நிபுணத்துவம் மற்றும் சரியான நேரத்திலான அவசர சிகிச்சை ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, கடுமையான மாரடைப்பு மற்றும் மோசமான இதய செயலிழப்புடன் உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து குணப்படுத்துவதில் இத்திட்டம் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

இந்த CHIP சிறப்பு மையத்தில் இதய சிகிச்சை மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்தியல் நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய சிறப்பு குழு செயல்படுகிறது. இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, கட்டமைக்கப்பட்ட நெறிமுறைகளின்படி விரைவாக முடிவெடுத்து சரியான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்கின்றனர்.

காவேரி மருத்துவமனையின் இதய சிகிச்சை பிரிவின் தலைமை நிபுணர் பேராசிரியர் அஜித் பிள்ளை பேசுகையில், “பெரும்பாலான நோயாளிகள் கடுமையான மாரடைப்பு அல்லது நீண்ட நாட்களாக கண்டறியப்படாத இதய நோயால் மிகவும் மோசமான மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். ஒரு நோயாளி மிகவும் மோசமான நிலையில் வரும்போது, எங்கள் மருத்துவக் குழு 10-15 நிமிடங்களுக்குள் அவரது உடல்நிலையை பரிசோதித்து உரிய சிகிச்சையைத் தொடங்கி, உயிரைக் காப்பாற்றுகிறது. சிக்கலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்போது, இதய செயல்பாட்டிற்கு தற்காலிகமாக உதவ எக்மோ (ECMO) மற்றும் சிறிய இதய பம்புகள் போன்ற நவீன கருவிகள் பல நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முன்னணி இதய சிகிச்சை மருத்துவமனைகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளைப் போன்று, பல்வேறு துறை மருத்துவர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் குழு அடிப்படையிலான அணுகுமுறையைப் நாங்களும் பின்பற்றுகிறோம்,” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “குழுவாக ஒருங்கிணைந்து செயல்படும் அணுகுமுறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம், உயிர்பிழைப்பது மிகக்கடினம் என்று கருதப்பட்ட பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றி அவர்களுக்கு காவேரி மருத்துவமனை புதிய வாழ்க்கையை அளித்துள்ளது,” என்றார்.

இதய வால்வு கசிவால் ஏற்பட்ட கடுமையான மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட ஒரு நடுத்தர வயது பெண்ணுக்கு அவசர சிகிச்சையாக ‘மிட்ரா கிளிப்’ உத்தி பயன்படுத்தப்பட்டதில், அவர் விரைவாக குணமடைந்தது இந்த மேம்பட்ட சிகிச்சை திட்டத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

மற்றொரு சம்பவத்தில், இதய வால்வு சுருங்கிய 85 வயது மூதாட்டிக்கு ‘டாவி’ (TAVI) சிகிச்சை மற்றும் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் மீண்டும் தனது அன்றாட பணிகளை எந்த சிரமமும் இல்லாமல் செய்ய முடிகிறது.

கடுமையான மாரடைப்பு மற்றும் ரத்தக் குழாய்களில் பல அடைப்புகளுடன் வந்த 65 வயது முதியவரையும் இம்மருத்துவமனை காப்பாற்றியுள்ளது. இம்பெல்லா என்ற இதய பம்ப் கருவியின் உதவியுடன் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது; அதனால் தடைபட்டிருந்த இரத்த ஓட்டம் சரி செய்யப்பட்டு இதயத்தின் செயல்பாடு படிப்படியாக சீரடைந்ததால் அவர் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார்.

காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் செயலாக்க இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கான சிகிச்சை செயல்பாட்டில், உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கல், மருத்துவ நிபுணத்துவம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையேயான நெருக்கமான ஒருங்கிணைப்பு ஆகியவை உள்ளடங்கும். இந்த CHIP திட்டத்தின் அறிமுகம், உலகத்தரம் வாய்ந்த இதய சிகிச்சையை சென்னை மாநகரிலேயே நோயாளிகளுக்கு வழங்குவதற்கான எங்களின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. மேம்பட்ட தொழில்நுட்பம், பல்துறை மருத்துவ நிபுணத்துவம் மற்றும் வலுவான மருத்துவப் பாதுகாப்பு அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம், குறிப்பாக அதிக இடர்வாய்ப்புள்ள மற்றும் அவசரகால நேரங்களில் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்தி நோயாளிகளை காப்பாற்றி அவர்களுக்கு குணமளிப்பதே எமது நோக்கமாகும்,” என்று தெரிவித்தார்.