ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குஜராத்
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 39 ரன்னில் வெளியேறினார்.
கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னில் நடையை கட்டினார். தேவ்தத் படிக்கல் 2 ரன்னில் ஏமாற்றினார். ஹெட்மயர் 11 ரன்னிலும், அஸ்வின் 6 ரன்னிலும், டிரெண்ட் போல்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது.
குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய குஜராத் அணியில் தொடக்க வீரர் சாகா 5 ரன்னுக்கும், மேத்யூ வேட் 8 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 34 ரன்கள் அடித்தார்.
பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் 45 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 19 பந்துகளில் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குஜராத் அணி18.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.