ஓலா, உபேர் டிரைவர்கள் வேலை நிறுத்தம் – 20 கிலோ மீட்டருக்கு ரூ.1000 வசூலிப்பதால் மக்கள் அதிர்ச்சி
ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மூன்றாவது நாளாக ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் எதிரொலியாக நேற்று சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்கிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை பங்கேற்க உள்ளனர்.
போராட்டத்திற்கு முன் சென்னையில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.400 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், போராட்டத்தின் எதிரொலியாக 20 கிலோமீட்டர் தூரத்திற்கு இன்று ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.