கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்! – பிரச்சாரத்தில் பரபரப்பு
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது. அதனுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், தி.மு.க. சார்பில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்கள். அவர்கள் தங்களது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் நேற்று விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
அவர்கள் மத்தியில் சின்னப்பன் பேசும் போது, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தமிழிசைக்கு வாக்களியுங்கள் என கூறுவதற்கு பதிலாக கனிமொழிக்கு ஓட்டு போடுங்கள் என பேசினார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு திரண்டு நின்ற கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து கூட்டத்தில் நின்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழிசை பெயரை சொல்லுமாறு கூறினர். இதை கேட்ட வேட்பாளர் சின்னப்பன் பின்பு சுதாரித்துக்கொண்டு தமிழிசைக்கு வாக்களியுங்கள் என கூறினார். இதன் காரணமாக பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு உண்டானது.