கற்பழிப்பு வழக்கில் சிக்கிய அமெரிக்கவாழ் இந்தியர்! – 25 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு
அமெரிக்க வாழ் இந்தியரான அசோக் சிங் (வயது 58) பென்சில்வேனியா பகுதியில் வசித்து வந்தார். நியூயார்க் மாகாணம் குயின்ஸ் நகர பகுதியில் வாடகை வீடு தேடி அலைந்த 40 வயது பெண்ணுக்கு அசோக் சிங் உதவ முன் வந்தார். அந்த பெண்ணை சந்தித்து பேசிய 4 நாட்களுக்கு பிறகு, செல்போனில் தொடர்பு கொண்டு வீடு கிடைத்து விட்டதாகவும் உடனடியாக கிளம்பி வருமாறும் அழைத்தார். அந்த பெண்ணும் அசோக் சிங்கை நம்பி அங்கு சென்றார். இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் அந்த பெண்ணை இருக்க வைத்துவிட்டு, கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பிய அசோக் சிங் உணவு மற்றும் மதுவை கொண்டுவந்து அந்த பெண்ணை தன்னுடன் குடிப்பதற்கு அழைத்தார். ஆனால் அந்த பெண் மது அருந்த மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அசோக் சிங் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அசோக் சிங் அயர்ந்து தூங்கிய நேரம் பார்த்து அங்கிருந்து தப்பிய அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.
தூக்கத்தில் இருந்து விழித்த அசோக் சிங், அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு, தான் தெரியாமல் இந்த தவறை செய்துவிட்டதாகவும், இனி இதுபோன்று நடந்து கொள்ளமாட்டேன் எனவும் குரல் பதிவை அனுப்பினார். இதையும் அந்த பெண் ஆதாரமாக போலீசில் கொடுத்தார். இதையடுத்து அசோக் சிங்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை அங்குள்ள கோர்ட்டில் நடந்து வந்தது. மருத்துவ பரிசோதனையில் அவர் அந்த பெண்ணை கற்பழித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்த வழக்கில் கோர்ட்டு தீர்ப்பளிக்க இருக்கும் நிலையில், அதிகபட்சமாக அசோக் சிங்குக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.